வியாழன், 1 டிசம்பர், 2016

வீருகொண்டெழு

வரி புலியே 
உன் வீரம் எங்கே
வீழ்ந் தாலும்
உன் சீற்றம் எங்கே

வேட்டையாடி பழக்கம் இல்லையே
வெறுங்கதைகள் நமக்கும் இல்லையே

முன்பொரு காலத்தில்
என தொடங்கும் வேகத்தில்
சிரிப்போசை கேட்க வில்லையா
கேட்டும் நீ நிறுத்த வில்லையா

குனிய குனிய குட்டு கின்றான்
எழுத்த்து நிற்கும் தெம்பு எங்கே
குனிந்து குனிந்து பழகியதால்
முதுகெலும்பு  நிமிர்வ  தெங்கே

வரலாறு நமக்கெதுக்கு
வீண் கதைகள் பேசுவதற்கு
முதுகெலும்பை நீ  நிமிர்த்து
உன் பழைய வரலாறை துடைத்து

வித்தாக புதைந்து விட்டாய்
ஒரு நாள் வளர்வோம் என நினைத்து
மழையில்லா காலமிது
உள் உஷ்ணத்தால் வளர்த்து
உன் மனச்சிறையை உடைத்து.

புதன், 30 நவம்பர், 2016

கறுப்பு பணம்



மனிதம் மிகுதியாய்
இருந்த மட்டும்
உயிரோடிருந்தது
பண்ட மாற்றம்
உதவிக்கு வந்தது
பணத்திற்கு மாற்றம்
விட்டு வைத்ததோ
பிணத்தை மட்டும்

பொருள் ஒரு ஆதாரமாய்
இருந்த நாளில்
மனிதன் என்றும் விழுந்ததில்லை
அடுத்தவன் காலில்
பொருளே ஆதாரமாய்
மாறிய போதில்
மனிதன் அடிமையாய் விழுத்திவிட்டான்
எண் எழுதிய தாளில்

ஓடும் நீருக்கு
உயிரோட்டம் அதிகம்
தேங்கிய நீரினில்
நோய்கள் பரவும்

நீருக்கு மட்டும் இல்லை
இந்த தேங்கும் விதி
பணத்திற்கும் உள்ளதடா
சீக்கிரம் முழி

பதுக்கிய தங்கமும்
நிறத்தினில் மங்கும்
பதுக்கிய பணமோ
மதிப்பினில் மங்கும்

அளவுக்கு மீறினால்
அமிர்தமும் நஞ்சு
பணம் மிகுதியாய் இருந்திட
உறங்குமா நெஞ்சு

யாருக்கு சேர்கிறாய்
இத்தனை பணம்
உழைப்பின்றி ஊனமாய்
மாறுதடா உங்க சனம்

உட்கார்ந்து சாப்பிடும் 
உந்தன் சந்ததி
என்று சேர்கிறாய்
திருட்டு வலி
சேர்த்த பணமெல்லாம்
செக்கு செக்காய்
செலவழிக்க பிறக்குமடா
உந்தன் வழி

தனக்கு மிஞ்சியதை
தானதர்மம் என்று 
மீண்டு வந்திடு
தமிழனாய் இன்று

செவ்வாய், 29 நவம்பர், 2016

ஜனநாயகம்

மக்களுக்கு அரசு
மக்களுக்காய் அரசு
மக்களால் அரசு
என்று வசனஙகள்
எழுதிய வார்ப்புகளும்

பேச்சோடு இருக்குது இங்கே
பேசிய வேடிக்கை மனிதர் 
எங்கே?


என் மக்களுக்கு அரசு
என் மக்களுக்காய் அரசு
என் மக்களால் அரசு
என்று கூசாமல் 
சுருட்டியத்தின் கோப்புகளும் 


மூச்சடக்கி உறங்குது இங்கே
விசாரிக்கும் நடுவர் எங்கே?


துளையிட்டு திருடுமாம்
திருடர் கூட்டம்
வருடும் காற்றையும் திருடுவார்
இந்த கூட்டம்
தட்டி கேட்பவர் மாயமாய்
மாறும் மட்டும்
தட்டி கேட்டிட இருக்குது 
ஆயிரம் சட்டம்


ஏன் என்று கேக்க நாதியில்லை
கேட்டுவிட்டு வாழ்ந்தவர் சுவடுமில்லை 


ஜனம் தான் நாயகர்கள்
என்று உரைத்தவர்கெல்லாம்
ஜனமே நாயகர்களாய் இன்றும்
சவ ஊர்வலத்தில்.

ஞாயிறு, 27 நவம்பர், 2016

ஞானத்தேடல்











தன்னை  தேடி 
ஒரு  நீண்ட  பயணம்
தொலைவெல்லாம்  தேடி  
தோர்த்த நயனம்
தூங்காத  இரவுகளும்
தேடி  திரிந்த  நினைவுகளும்
காற்றோடு  தேய்ந்து  போக

விழிப்புணர்வோடு  ஒரு  உறக்கம்
உட்புறமாய்  ஒரு  தொடக்கம்


எனக்குள்லேயே நான் !
காணாமல்  போனேன் !
உணர்வற்று போக
எல்லாமும்  நான் !!!
தேடியதன்  வாசல்
தெளிவாக ,
மொத்த  தேடலின் 
உணவாக ,
நகராமல்  நா...
வாயடைத்து போனேன்
.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

குங்பூ - உடலினை உறுதி செய்



குங்பூ அடிப்படைகள்

குங்பூ என்னும் தற்காப்பு கலையில் தாக்குவதற்கோ, தடுபதற்க்கோ அல்லது எதிர் தாக்குதல் செய்வதற்க்கோ முதல் அடிப்படை நாம் நிற்கும் முறை அல்லது நிலை. இதை ஆங்கிலத்தில் Stance என்று குறிபிடுகிறார்கள்.

குங்பூவில் அடிபவரது திறம் முழுவதற்க்கும் அவர்களின் நிலையே ஆணிவேராக பயன்படுகிறது. இதை ஆங்கிலத்தில்

"The feet are the root of power" என்று குறிபிடுவார்கள்

இந்த நிலைகள் பல இருந்தாலும், அவைகளுக்கு அடிப்படையாக
ஐந்து நிலைகலை வைத்துள்ளனர். அவை


குதிரை நிலை (Horse Stance)








வில் நிலை (Bow Stance)





















சாய்தல் நிலை (Sliding Stance)
 
















பூனை நிலை (Cat Stance)
 



















திருகல் நிலை (Twisting Stance)













இப்பொழுது முதல் நிலையான குதிரை நிலையை பற்றி பார்ப்போம்.

குதிரை நிலை என்பது குதிரை மேல் அமர்வது போல் இருபதினால் இதற்க்கு குதிரை நிலை என்று பெயர் வைத்தனர்.

இந்த குதிரை நிலைக்கு பயிர்ச்சியாளர் தனது இரு கால்களை ஒன்றரை அல்லது இரண்டு தோள்பட்டை அளவு அகலமாக வைத்து ஒரு மேசையின் மேல் அமர்வதை போல அமர வேண்டும்.





இந்த நிலையின் முக்கியமான அளவுகோல்களை பார்ப்போம்.

1) இரு பாதங்களும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.

2) இரு பாதங்களுக்கு இடையே ஒன்றரை தோள்பட்டை அல்லது அதற்கு சற்று அதிகமான அகலம் இருக்க வேண்டும்.

3) இரு கால்களின் விரல்கள் முன்னே நோக்கியவாறு இருக்க வேண்டும்.

4) கால்களின் பாதங்களும் முட்டிகளும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.

5) முட்டியும் இடுப்பிற்கு கீழே தொடை ஆரம்பிக்கும் இடமும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.

6) நமது தலையின் உச்சியும் முதுகுத்தண்டின் அடிபாகமும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.

மேல் சொன்ன அளவுகோல்களுடன் குறைந்தது ஒரு நிமிடமாவது குதிரை நிலையில் அமர வேண்டும்.

இந்த நிலையில் அமர்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள்.

1) மேம்படுத்தப்பட்ட நிலை :
           பயிற்சியாளர் குதிரை நிலையில் அமரும்போது அவருடைய எடை சம அளவு இரு கால்களுக்கும் சென்றடைகின்றது. இந்த நிலையில் அவர்கள் முன்னால் அல்லது பின்னால் குனியாமலும், இடது அல்லது வலது பக்கம் சாயாமல் இருக்க கற்று கொள்கிறார்கள்.
          நீண்ட நேரம் குதிரை நிலையில் அமர்வதால் பயிற்சியாளரின் இடுபிற்கு மேல் பாகம் சமநிலைப்படும் இந்த நிலையில் அவர்கள் ஓய்வெடுக்க முடியும்.
         இந்த நிலையில் பயிற்சி மேற்கொள்வதால்  நீண்ட நேரம் வெவ்வேறு  நிலையில்  அமர்வதால் வரும் தசை வலியை தவிர்க்கலாம்.


2) மேம்படுத்தப்பட்ட சமநிலை:
         இந்த நிலையில் கீழாக அமர்வதால் கால்கள் மிகுந்த பலம் பெறுகின்றன  இதனால் பயிற்சியாளர் அவரது எடையை சமநிலையில் வைத்துகொள்வார். யார் ஒருவர் அவரது எடையை சமநிலையில் வைத்திருப்பாரோ அவரை அடித்து வீழ்த்துவது என்பது மிக கடினமான செயல் ஆகும்.

3)  கால்களின் வேகம் அதிகரிக்கும்:
         மேல் கூறிய இரண்டும் இருந்தால் நமது எடையை எளிதாகவும் வேகமாகவும் நகர்த்த முடியும். இது நமது சண்டையில் வேகத்தையும் லாவகரமாக நகர்வதையும் எளிதாக்கும்.

4) இடுப்பை பலப்படுத்தும்:
          குதிரை நிலையில் கீழாக அமர்வதால் நமது எடை இடுப்பெலும்பு ஒட்டியுள்ள தசைகளில் சமன்படுகிறது ஆதலால் இங்கிருக்கும் தசைகள் வலுபெருகின்றன. இது தன்னை அறியாமல் சிறுநீர் கழிப்பது மற்றும் ஆண்மை குறைவு போன்ற பிரச்சன்னைகளை சரிசெய்கின்றது.

5) வயிற்று உட்தசைகளை வலிமையாக்கும்:
        குதிரை நிலையில் அமர்வதால் வயிற்றின் உட்தசைகள் உள்ளிழுக்கப்படுகின்றன இந்த உட்தசைகள் தன நமது வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளை தாங்கி பிடிபதற்க்கு உதவுகின்றன. இந்த உட்தசைகள் உள்ளிளுக்கப்படுவதால் பயிற்சியாளருக்கு தட்டையானதாக வயிறு உருமாறுகிறது.

6) வலிமையான இடுப்புபகுதி:
         குதிரை நிலையில் அமர்வதால் வயிற்று உட்தசைகள் வலிமையாகின்றன, இதனால் வயிறின் உள் உறுப்புகள்  முதுகெலும்பின் முன்னால் சரியாக அமையப்பெற்று இடுப்பின் கீழ்பாகமும் பலப்படுகின்றன. இதனால் இடுப்பு தேய்மானம் மற்றும் இடுப்பு வலிகளில் இருந்தும் பயிற்சியாளர் காப்பாற்றபடுகிறார்.

7) சிறுநீரகத்தை வலிமையாக்குகின்றது:
         வலிமையான இடுப்புபகுதி இருப்பதால் சிறுநீரகத்திற்கும் அதனை சுற்றியுள்ள நரம்புமண்டலதிற்கும் அழுத்தம் வராமல் பாதுகாக்கின்றது. இதனால் சிறுநீரகம் அதன் வேலையை செம்மையாக செய்ய முடிகிறது.
இதுவே வலிமையான இடுப்பு மற்றும் இயக்குநீர்களை சுரப்பிகளை சரிவர வேலை செய்ய வைக்கிறது.

8) மேம்படுத்தப்பட்ட இயக்குநீர் செயல்பாடு:
        இந்த குதிரை நிலை உடலின் முக்கிய இயக்குநீர் சுரப்பிகலான அட்ரினல், தய்ராயிட், மற்றும் பாலியல் சுரப்பிகளை சரிவர இயங்கவைக்கிறது. இதனால் ஒருவர் மிகுந்த ப்ராணசக்தியுடனும், வலிமையான முடி மற்றும் ஆரோக்கியமான தோல், நகம் போன்றவற்றிற்கு சொந்தகாரர் ஆகிறார்.
       
9) இளமையாக இருக்க வைக்கிறது:
         இந்த நிலையில் அமர்வதால் முழு உடம்பும் சீர் செய்யப்படுகிறது இதனால் பயிற்சியாளர் இளமைத்துடிப்புடன், சூடான ரத்தம் உடையவராகவும் இருப்பார்.

10) இருக்கை தேவையில்லை:
          இந்த குதிரை நிலையை பயிற்சி செய்வதால் என்றும் இருக்கையை தேடி அலையை தேவை இல்லை.


(தொடரும்)

சனி, 3 செப்டம்பர், 2016

குங்பூ - உடலினை உறுதி செய் :-



3) ஷாவ்ளின் குங்பூ கதைகள் (மீண்டும் மீண்டும் பயிற்சி செய்) :





            ஒருவன் தான் குங்பூ கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு ஆசிரியரை நாடினான். அவர் அவன் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவில்லை. அவன் அந்த ஆசிரியரை தொந்தரவு செய்து  கொண்டே இருந்தான்.

உடனே ஒரு கட்டத்தில் ஆசிரியர் அவனை சென்று ஒரு மரத்தை காண்பித்து அதை பிடுங்குமாறு கூறினார். அவன் அந்த செயலை முடித்தவுடன் அவனுக்கு குங்பூ கற்றுத்தருவதாக கூறினார். அவனும் உண்ணும் உறங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் மரத்தை பிடுங்குவதையே தொடர்ந்து முயன்றுகொண்டிருதான்.





     அந்த ஆசிரியரின் மாணவர்கள் அவனை கேலிசெய்தனர். அவன் அவர்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் மரத்தை பிடுங்குவதிலேயே கவனம் செலுத்தினான். ஒன்றரை ஆண்டுகள் கழித்து அந்த மரத்தை வேரோடு பிடுங்கி விட்டான்.

அதை அந்த ஆசிரியரிடம் வந்து கூறி தனக்கு குங்பூ கற்றுத்தருமாறு வேண்டினான்.

அந்த ஆசிரியரின் மாணவர்கள் அவனை நம்பாமல் அந்த இடத்தை பார்வையிட்டு வந்து தாங்கள் கண்டதை ஆசரியரிடம் கூறினர். அவர் தன்னை தொந்தரவு செய்தவனிடம் சென்று, இனி அவன் குங்பூ கற்றுக்கொள்ள தேவையில்லை என்று கூறி அனுப்பிவிட்டார். பின்னர் அவரது மாணவர்களிடம் அவன் குங்பூவில் உயரியதான சீ குங் (Chi-Kung or Qi- qong) கலையில் அதிஉன்னத நிலையை அடைந்து விட்டதாக கூறினார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.


தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் -குறள்-619

தெய்வத்தின் துணைக் கொண்டும் ஒரு செயலில் வெற்றிபெற முடியாத நிலை இருந்தபோதிலும் ஒருவன் தன உடலை வருத்தி உழைத்த அளவிற்கு வெற்றி கிடைக்கும்


குங்பூவிற்கு இது மிகவும் பொருந்தும்.

அடுத்த பதிவிலுருந்து பயிற்சிகள் ஆரம்பம். உடலினை உறுதிசெய்ய தயாராய் இருங்கள்.

(தொடரும்)

புதன், 31 ஆகஸ்ட், 2016

பணம் தின்னும் பிணங்கள்


பணம் பார்த்து பழகிய மனமும்
பிறர் இடம் தேடி அலைகின்ற குணமும்
புகழ் தேடி மறைகின்ற சனமும்
தன் கணக்கோடு மடிகின்றார் தினமும்

உன் செயலோடு தொடங்ககிடும் கணக்கு
இடம் மாறி திரும்பிடும் உனக்கு
இது தெரிந்தாலும் ஏன் இந்த செருக்கு
நற் செயலோடு அதை தினம் பெருக்கு

உணவென்று விஷமும்
விஷமாக மருந்தும்
அமிலமாய் நீரும்
திருத்த பணமாகி போகும்
ஏழைக்கு சோறுமட்டும்
என்றும் கனவாகி போகும்

பேசினால் புரட்சி
சொல்லவோ சாட்சி
தொடருமோ நீட்சி
என்றுதான் மாறுமோ
பணம் தின்னும் பிணங்களின்
பொருள் எண்ணும் காட்சி.






வியாழன், 18 ஆகஸ்ட், 2016

குங்பூ - உடலினை உறுதி செய் :-




2) ஷாவ்ளின் குங்பூ கதைகள் (மீண்டும் மீண்டும் பயிற்சி செய்) :

ஒரு ஊரில் ஒருவன் குங்பூ கற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தான். அவன் ஷாவ்லின் குங்பூ ஆசரியரிடம் சென்று தானும் குங்பூ பயில வேண்டும் என்று சொன்னான் அதற்கு அவர் முதலில் குங்பூ பள்ளியை சுத்தம் செய்ய சொன்னார். அவன் அவர் கட்டளைக்கு கீழ்படிந்து அந்த வேலையை செய்தான். ஒரு வாரம் சென்றபின் மீண்டும் தனக்கு அக்கலையை பயிற்றுவிக்குமாறு வேண்டினான் அவர் செவி சாய்க்கவில்லை.





ஒருவாரம் ஒருமாதம் ஆனது, பின்னர் இரண்டு மாதம், மூன்று மாதம் இப்படியே ஆறுமாதம் கடந்து பின்னர் கோவமாக அவரிடம் சென்று தனக்கு குங்பூ கலையை கற்றுத்தருவீர்களா இல்லை கற்றுத்தர மாடீர்களா என்றான். அந்த ஆசிரியர் அவனை அழைத்து சென்று ஒரு மண் வாளியை தண்ணீரால் நிரப்பி அவனது இரு உள்ளங்கையை கொண்டு மாறி மாறி அடிக்கச் சொன்னார். அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனை அடிக்க ஆரம்பித்தான். ஒரு வாரம் முழுவதும் அதை தொடர்ந்து செய்ததால் அடுத்து என்ன கற்றுத்தர போகிறீர்கள் என்று கேட்டான். அதற்க்கு அவர் மீண்டும் தண்ணீரை அடிப்பதையே தொடரச்சொன்னார்.




இப்படியே அவன் சென்று கேட்டபோதெல்லாம் அவனை மீண்டும் மீண்டும் அதையே தொடர்ந்து செய்யச்சொன்னார். காலம் வேகமாக கடந்து போனது. ஆறு மாதங்கள் ஆனது இப்போது அவன் கோவமாக அடுத்து வேறு எதாவது கற்றுத்தருவீர்களா என்று கேட்டான். இம்முறை அவன் கோவத்திற்கு செவி சாய்க்காமல் மீண்டும் மீண்டும் தண்ணீரை அடிக்கும் பயிற்சியையே தொடரச்சொன்னார். இப்படியே ஒரு வருடம் கழிந்தது அவன் வேறெதுவும் புதிதாக கற்றுக்கொள்ளவில்லை. அப்போது ஒன்றரை  ஆண்டுகள் கழித்து அவன் வீட்டிற்க்கு சென்றான். அவன் வீட்டில் அவன் உறவினர்கள் எல்லோரும் அவனை குங்பூ கலையை செய்து காட்டுமாறு வேண்டினர். அவன் தான் எதுவும் கற்கவில்லை என்று சொன்னான்.

உறவினர் எல்லோரும் அவன் தங்களை ஏமாற்றுகிறான் என்று எண்ணி அவனை கேளி செய்தனர். அதனை சகிக்க முடியாமல் அவன் கோவத்தின் உச்சத்திற்கே போனான். அங்கு சென்று நான் கற்றுகொண்டது இதுதான் என்று எதிரே இருந்த மிக பெரிய மேசையை அடிதான். அப்பொழுது அந்த மேசை இரண்டாக பிளந்தது. உறவினர் எல்லோரும் அதனை பார்த்து வியந்தனர்.

அப்பொழுது தான் அவன் பயின்ற பயிற்சி அவனை எவ்வாறு செம்மை படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்தான்.

குங்பூ என்பது ஒவ்வொரு பயிற்சியாக எடுத்துக்கொண்டு அதனை திரும்ப திரும்ப பயிற்சி செய்து அதில் செம்மை அடைவது என்பதாகும்.

புரூஸ்லீ தனது வாக்கியங்களில்




என்று குறிபிடுகிறார் .

அதன் அர்த்தம் தான் ஒரு மனிதன் பத்தாயிரம் வகையான உதைகள் கற்றுகொண்டவனை கண்டு பயபடுவதில்லை என்றும் ஆனால் ஒரு மனிதன் ஒரு உதையை பத்தாயிரம் முறை பயின்று இருந்தால் அவனை கண்டு பயப்படுவேன் என்று குறிப்பிடுகின்றார்.

(தொடரும்)

ஞாயிறு, 17 ஜூலை, 2016

பெண் பார்க்கும் படலம்:-


(வேலை பார்க்கும் ஊரில் இருந்து பாட்டு கேட்டுகொண்டே சொந்த ஊர் பயணம், தூக்கத்திற்காக ஏங்கி பின் தள்ளாடும் நடையோடு பெண் பார்க்க சென்று பின் அவளை பிடித்ததும்)

வழி நெடுக வேடிக்கை
பயணம்
மாதம்தோறும் இனிக்கின்ற
தருணம்

இசை கேட்டு ஓயாத
செவிகள்
பிறர்பாட மனதில் ஓடும்
கவிகள்

தாமதமாய் வந்து சேரும்
தூக்கம்
இன்றேனும் கிடைக்குமோ என்ற
ஏக்கம்

வந்திறங்கிய வாசலினின்று
பெண்பார்க்க போகிறோமெண்று
சொன்னவர்கள் சோர்ந்துபோக
சிரித்தேன் கேலியாக

இருளோடு ஒளி சேரும்
நேரம்
தீரவில்லை இரு இமையின்
பாரம்

முகம் துடைத்து
அடி வைத்து
நகராத கால்களோடு
ஓயாமல் அடம்பிடித்து
பேருந்தில் பயணம் ஆனேன்
என் மறுபாதி தேடபோனேன்

கேள்விக்கு விடையாக
மௌனத்தின் மொழியாக
பார்வையால் அளவெடுத்தாள்
இந்த ஊமைக்கும்
மொழி கொடுத்தாள்

கள்ளம் அற்ற
அவள் பேச்சு
கிராமத்து வழக்கோடு
கலந்தமைந்த சொல்வீச்சு

புன்னகையில் மருந்து வைத்தாள்
என் நினைவில் கலந்துவிட்டாள்!


நான்:-



தனியாக நான் இருக்க
துணையாக என் நினைவு
நினைவுக்குள் கருவாக
மறுபடியும் என் வரவு

வரவேற்கும் ஞாலத்தின்
மெய்யான ஓர் உணர்வு
உணர்வுக்கு உணவாக
நான் என்ற ஓர் கனவு.

வெள்ளி, 15 ஜூலை, 2016

குங்பூ - உடலினை உறுதி செய் :-



1) குங்பூ என்னும் கலை:

குங்பூ என்னும் சொல் நாம் நினைப்பது போன்று சீன தற்காப்புக் கலையை குறிக்கும் சொல் அல்ல.


அதன் பொருள் மிக கடினமாக நாள்பட உழைத்து அடைந்த தனி திறமை, கல்வி போன்றவற்றை குறிக்கும்  சீனச்சொல். அது எந்த பிரிவிலும் இருக்கலாம், ஏன் சமயலாகக் கூட இருக்கலாம்.

உண்மையான சீன தற்காப்பு கலையை குறிக்கும் சொல் வூஷூ(wu-shu ) ஆகும். வெளிநாட்டினர் குங்பூ என்ற சொல்லையே தற்காப்பு கலையோடு
தொடர்பு படுத்தி அப்பெயரையே தற்காப்பு கலைக்கு சூட்டிவிட்டனர்.

இந்த கலையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவை ஷவ்ளின் வூஷு, வூடேங், விங் சன், தாய்ச்சி, சின்னா, இன்னமும் பல பிரிவுகள் உள்ளன.

இக்கலை மிகுந்த வீரியத்துடனும் மிக நுணுக்கமாகவும் கற்றுத்தருமிடம் ஷவ்ளின் டெம்பில் (Shaolin Temple). இக்கலையை பயில மிக குறைந்த வயது 6.
6 வயதுக்கு மேல் எந்த வயதிலும் இதை கற்றுக்கொள்ளலாம்.

இக்கலையை பயிலும் முன் தனி மனித ஒழுக்கம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மது, மாமிசம், பெண் போன்ற ஆசைகளை அறவே துறந்த பௌத்த மததினர்கே இக்கலை பயிற்றுவிக்கப்பட்டது.
 
முதலில் இந்த கலையை வெளிநாட்டினர் மற்றும் ஏனைய மதத்தினருக்கு  பயிற்றறுவிக்க தடை இருந்து வந்தது. பின்னர் அது காலபோக்கில் தளர்ந்து இப்பொழுது எல்லா நாட்டிலும் பயிற்றுவிக்க படுகிறது.

இந்த கலையை பயில்பவர்கள் பத்து சட்டங்களை தங்கள் மனதினுள் நிறுத்திட வேண்டும். அவை

1) குருவிடம் மிகவும் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். தன்னுடன் பயிலும் மாணவ மாணவியரை தன் சகோதரன் மற்றும் சகோதரியாக பாவிக்க வேண்டும்.


2) விடா முயற்சியுடன் இந்த கலையை பயில வேண்டும். அதற்குத் தேவையான உடல் மற்றும் மனபலத்தை பெற்றுருக்க வேண்டும்.

3) பெற்றோருக்கு ஏற்ற பிள்ளையாக இருக்க வேண்டும், மற்றும் வயதானவர்களுக்கு  உரித்தான மரியாதையும் சிறியவர்களுக்கு அரணாகவும் இருக்க வேண்டும்.

4) நீதியை எந்நாளும் நிலை நிறுத்த வேண்டும். தைரியமாகவும் புத்திசாலியாகவும் இருந்திட வேண்டும்.

5) நன்றி கெட்டவனாகவோ அல்லது நேர்மை இல்லாதவனகவோ இருக்கக்கூடாது.

6) ஒருபொழுதும் கற்பழிப்பு, பலவந்தபடுத்தல் , திருடுதல், பொய் பேசுதல், ஏமாற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

7) தீயவர்களின் சேர்க்கையோ அல்லது தனக்கு தானே தீங்கு செய்வதோ மற்றும் தற்பெருமையோ அறவே கூடாது.

8) அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் கூடாது. ஒருபொழுதும் மக்களை ஒடுக்குதல் அல்லது கேளிசெய்தல் கூடாது.

9) மனிதாபிமானத்துடனும் கருணையுடனும் இருத்தல் வேண்டும். அமைதி மற்றும் சந்தோசத்தை பரப்புதல் வேண்டும்.

10) தகுதியான மாணவர்களுக்கே தீரமாகவும் மற்றும் தாராளமாகவும் இந்த கலையை பரப்புதல் வேண்டும்.


(தொடரும்)

சனி, 9 ஜூலை, 2016

ஞாபகம்:-



மறக்க முயற்சிக்கிறேன்
இறங்க மறுக்கிறாள்!
உறங்க முயற்சிகிறேன்
இமையை தூக்கிப் பிடிக்கிறாள்!


உண்ண முயற்சிகிறேன்
சுவாசமாக சென்று
உணவை தடுக்கிறாள்!

கடவுளே!
ஒன்றே ஒன்றை வரமாக
கேட்டேன்
"ஞாபகமறதியை"!
நீயோ, தந்து சென்றாய்

ஆனால்
நான் மறந்ததோ
"அவளை மறக்கவேண்டும்"
என்பதை.

புதன், 29 ஜூன், 2016

வாழ்வியல்:-


துள்ளி துள்ளி வந்த முயல்
விழுந்த இடம் பச்சை வயல்
தாவி தாவி ஓடும் கயல்
காட்சி யாவும் இறைவன் செயல்

ஓடி ஓடி கனத்த கால்கள்
களித்த பொழுது விழுந்த பாக்கள்
ஆடி ஆடி சோர்ந்த நாட்கள்
அமிர்த மென்ன்றே சொல்வார்கள்

வந்து வந்து போன இடம்
தங்கும் போது  சொந்த மடம்
உண்டு உண்டு வளர்த்த கடம்
யாரை நம்பி இந்த சடம்

வேண்டும் வேண்டும் என்று சொல்லி
கற்ற இடம் சேர்ந்த பள்ளி
வாரி வாரி கொடுத்த கள்ளி
நேரம் வந்தாள் முற்று புள்ளி.

சனி, 25 ஜூன், 2016

ஏழையின் கனவு : -





இமை இறங்கும் நேரம்
என் விழியின் ஓரம்
மெதுவாக எட்டிப் பார்த்தாள்
இரு கண்களோடு வேர்த்தாள்

காற்றென்னைத் தீண்ட
அவள் கைகளாய் ஆனது
கண்ணீரும் காய்ந்தது

அவள் நினைவுகளோடு
என் உடலும் சாய்ந்தது

விழி சாமரங்கள் சேர
எனக்குள் அவளைத் தேட
காணவில்லை அந்த வெள்ளி நிலவு
ஆதலால்
இன்னமும் தீரவில்லை
இந்த ஏழையின் கனவு.

கானல் நீர்:-



இதயத்திலே தேடினேன் அமைதியை
திடுமென நெஞ்சுக்குள் குதித்தாள்
என் இதயம் உடைய

வெள்ளி, 24 ஜூன், 2016

தேவதையின் சாபம் :-



என் விழியில் மின்னல்
மேகமாய் அவள் கூந்தல் உரச - என்
இதயத்திலே இடி

காதல் இவள் உருவத்திலா?
இல்லை பருவதில்லா?
அல்லது
இவள் புன்னகையிலா?

விதையாக நுழைந்தாள்
விழுதுகளாய் எழுந்தாள்
வேர்களை பிடித்தேன்
வெட்டிவிட துடித்தேன்
நிழலோடு வாழ
நிஜங்களை துடைத்தேன்

என் இதயத்தில் கீறல்கள்
வழிந்தன காதலின் சாரல்கள்
வெகு அருகில் வந்தாள்
எனை பருகி நின்றாள்

சிலையான என்னை
சிரிப்போடு சிதைத்து
என் இதயத்தை உதைத்து
விளையாடிப் போனாள்
என் உயிரைக் களவாடிப் போனாள்

நடைபிணமாய் நானும்
நடைபயில வேண்டும்
என்று அவளிட்ட சாபம்
இன்னமும் தீரவில்லை
அந்த தேவதையின் கோபம்.

ஞாயிறு, 19 ஜூன், 2016

அவள் எங்கே?



மேகங்கள் நீர்த்து போகும்
சூரியனும் வேர்த்து போகும்
முழு நிலவும் மறைந்து போகும்
அவள் இதழோரப் புன்னகையை கண்டு

மலையோரம் நீண்ட ராகம்
கருங்குயிலின் இனிய கானம்
வாரங்கள் ஆன போதும்
இசைக்கின்றது என்செவியின் ஓரம்

மாதங்கள் போன பிறகு
தனியாக விரிந்ததென் சிறகு
வழி நெடுக நடந்து பார்த்தேன்
பழைய கானங்களை தேடி தீர்த்தேன்

ராகங்கள் நீளவில்லை
கானங்களை காணவில்லை
வாரங்கள் தோரும்
வற்றாத ஊத்தாக
இசைத்து நின்ற
கருங்குயிலும் பாடவில்லை

காரணங்களை தேடி அலைந்தேன்
கானகுயிலை பாட அழைத்தேன்

தழுதழுத்த குரலில் 
கோவமாய் கேட்டது
உன்னோடு எப்பொழுதும் வருவாளே
"அவள் எங்கே" என்று?

வியாழன், 16 ஜூன், 2016

குறும்பு:

அவள் கருவிழி இரண்டும்
விடுதலை வேண்டும் என்று
இமையோரம் சண்டை போட!

எனை கண்டும் காணானது போல்
எதையோ தேட!

தேடவேண்டாம்
உன் இதயம் எனக்குள்ளே என்றேன்!
பதிலுக்கு சொன்னாள்
நான் தேடுவது உங்களுடையதை என்று.